Advertisment

20 கோடி கடன் கொடுப்பதாகக்கூறி டாக்டரிடம் 20 லட்சம் ரூபாய் சுருட்டிய இருவர் கைது!

Two arrested for allegedly defrauding a doctor of Rs 20 lakh

Advertisment

சேலத்தில், 20 கோடி ரூபாய் கடன் கொடுப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த மருத்துவரிடம், நூதன முறையில் 20 லட்சம் ரூபாய் சுருட்டியதாக இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். மருத்துவர். இவர் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடாவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, "கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடனுதவி வழங்குவது தொடர்பாக பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு 20 கோடி ரூபாய் கடன் தேவைப்படுகிறது. அதற்கான நடைமுறைகளைக் கூறும்படி கேட்டேன்.

Advertisment

எதிர்முனையில் பேசிய நபர், தான் சேலம் 5 சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்து நேரில் சந்தித்தால் கடனுதவி பற்றிய விவரங்களை பேசலாம் என்றார். அதையடுத்து, கடந்த ஜூலை மாதம் நானும், என்னுடைய மேலாளர் நூருதின் என்பவரும் சேலம் வந்து, அவர் குறிப்பிட்டுள்ள விடுதிக்குச் சென்று சந்தித்தோம்.

அங்கு என்னிடம் பேசிய நபரும், அவருடன் மேலும் சிலரும் இருந்தனர். அவரிடம் கடன், அதற்கான வட்டி விவரங்களைக் கேட்டோம். அப்போது அவர், நீங்கள் கேட்டபடி 20 கோடி ரூபாய் இப்போதே தயாராக இருக்கிறது என்று சொன்னதோடு, ஒரு சூட்கேஸ் பெட்டியைத் திறந்து அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததையும் காட்டினார்.

கடனுதவிக்கான ஒப்பந்த பத்திர ஆவணச் செலவுகள், தரகு கமிஷன் என 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு அப்போது பணத்தேவை இருந்ததால் நானும் அவர்களிடம் 20 லட்சம் ரூபாயைக் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் சொன்னபடி 20 கோடி ரூபாய் கடன் கொடுக்காமல் என்னுடைய பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே சென்றவர்கள் அதன் பின்னர் காணவில்லை. பிறகுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்தப் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு, ஆணையர் உத்தரவிட்டார். அதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கரூரைச் சேர்ந்த யோகராஜ், நெல்லையைச் சேர்ந்த அன்பரசு உள்பட 9 பேர், இந்த பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களில் யோகராஜ், அன்பரசு ஆகிய இருவரும் சேலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இரு நாள்களுக்கு முன்பு அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த கும்பல் மதுரை, கரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் இதேபோல் கடன் தருவதாக ஆசை வலை விரித்து லட்சக்கணக்கில் ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடன் கொடுப்பதாகக்கூறி அந்த கும்பல் சூட்கேஸ் பெட்டிக்குள் வைத்திருக்கும் பணம் போலி ரூபாய் நோட்டுகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 7 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

money Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe