Skip to main content

இரட்டை குழந்தைகள் கொடூர சம்பவம்... விசாரணையில் வெளியான பரபரப்பு வாக்குமூலம்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Twin children incident, sensational confession released during the investigation
                                                                         சாந்தி

 

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி 3வது குறுக்குத் தெருவில் குடியிருந்து வருபவர் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரியன் என்ற ஆண் மற்றும் ஆரிகா ஸ்ரீ என்ற பெண் என இரட்டைக் குழந்தை பிறந்துள்ளன. மதுரையில் இருந்த இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் கோவைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக மதுரையிலிருந்து ஐஸ்வர்யாவின் தாயார்  சாந்தியையும் உடன் அழைத்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், 21ஆம் தேதி இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது சாந்தி, குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது. பெண் குழந்தையைத் தேடியபோது அந்தக் குழந்தை வீட்டில் உள்ள கழிப்பறைக்குள் அமுக்கி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அக்குழந்தையை மீட்டு படுத்துக்கொண்டிருந்த ஆண் குழந்தையை தூக்கச் சென்றபோது, அக்குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளது. இதற்குள் பாட்டி சாந்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த ஆண் குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Twin children incident, sensational confession released during the investigation

 

பேரக்குழந்தையைக் கொன்றுவிட்டு பேத்தியை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடிய பாட்டி சாந்தி, பல ஆண்டுகளாக மனரீதியான பாதிப்போடு இருந்துவந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய சாந்தியை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட சாந்தியின் கணவர், மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மற்றும் மதுரை பகுதியில் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று (25.10.2021) காலை மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் சாந்தி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் அவரை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.  

 

தொடர்ந்து துடியலூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ‘அன்று தனது மகள் மருந்து கடைக்குச் சென்றதுவரை மட்டுமே தனக்கு ஞாபகம் இருப்பதாகவும், அதன் பிறகு தனது மகள் வந்து தன்னை அடித்ததற்குப் பிறகே மறுபடியும் ஞாபகம் வந்ததாகவும், இடையில் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை’ என்று வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.