Advertisment

திருமுருகன் காந்தியை தனியறையில் சிறைவைத்திருக்கும் கொடூரம்! மதிய உணவு வழங்காமல் அக்கிரமம்! வேல்முருகன் கண்டனம்

tvk

Advertisment

திருமுருகன் காந்தியை காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் சிறைவைத்திருக்கிறார்கள். சுகாதாரமான உணவோ, பெரும்பாலும் மதிய உணவுமே வழங்காது அவருக்கு உடற்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும் அக்கிரமம் நடக்கிறது. வயிற்றுப்போக்கு-வாந்தி, ரத்த சர்க்கரைக் குறைவு மற்றும் ரத்த அழுத்தக் குறைவால் அவர் மயங்கிவிழுந்த நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்காத அரக்கத்தனமாக உள்ளது.

சிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பான இந்த மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கவும் அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சேலம்-படப்பை 8 வழிச்சாலை ஆகியவை பற்றி ஐநா அவையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல வழக்குகளைப் புனைந்து சிறையிலடைத்துள்ளது தமிழக அரசு; ஒன்றிய பாஜக மோடி அரசின் கட்டளைப்படியே இதைச் செய்துள்ளது அதிமுக பழனிசாமி அரசு.

Advertisment

இதில் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தால் திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார்; ஆனால் மீதி வழக்குகளுக்காக 45 நாட்களாக அவர் வேலூர் சிறையில் உள்ளார்.

சிறையில் காந்தி, காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் அடக்கப்பட்டுள்ளார். அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அவர் அனுமதிக்கப்படுவதில்லை. முறையான, சுகாதாரமான உணவு அவருக்கு வழங்கப்படவில்லை; பெரும்பாலும் மதிய உணவே வழங்கப்படுவதில்லை.

வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கிலான இத்தகைய செயல்களால் திருமுருகன் காந்திக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி, ரத்த சர்க்கரைக் குறைவு, ரத்த அழுத்தக் குறைவு என உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அவர் மயங்கிவிழுந்துகிடந்திருக்கிறார். அதைத் தற்செயலாகப் பார்த்த காவல் பணியாளர் ஒருவர் பயந்து, மனமிரங்கி அவரைத் தூக்கித் தோள் மேல் போட்டுக் கொண்டுபோய் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு திருமுருகன் காந்தி கொண்டுசெல்லப்பட்டது குறித்து அவரது வீட்டாருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவமனையில் இரண்டு நாட்களாவது படுக்கையில் இருக்க வேண்டும் என்று சொன்னார் மருத்துவர். ஆனால் அவரே சிறிது நேரம் கழித்து, வேண்டியதில்லை போகலாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக திருமுருகனை வெளியேற்றியிருக்கிறார்; காரணம், மேலிட அழுத்தம் என்கிறார்கள்.

இதனால் திருமுருகன் காந்தி உடல்நல பாதிப்புடன் தொடர்ந்து அவதிப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்; சிகிச்சை அளிக்காத நிலையில் இந்த உடல்நலிவு நோயாக வலுப்பெற்று விபரீத விளைவுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் இந்த தொல்லை, துன்புறுத்தல்கள் திட்டமிட்டே நடப்பவை என்பதோடு, சிறைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானவை; மனித உரிமை மீறல்கள் இவை!

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கவும் அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.

thirumurugan gandhi velmurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe