“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி” - த.வெ.க. தலைவர் விஜய் 

tvk vijay about chennai guindy doctor issue

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மருத்துவரை குத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அவரது தாயார் கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. மேலும்

இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக த.வெ.க.-வின் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Doctor guindy
இதையும் படியுங்கள்
Subscribe