'தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது அதிமுக. கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் கூட்டணி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், 'அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்' என தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணி அமையுமா? தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற கேள்விக்கு 'சில காலம் காத்திருங்கள் அனைத்தும் தெளிவாகும்' என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/27/a4220-2025-06-27-10-02-29.jpg)