
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார்(22). தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரான இவர் நேற்று முன்தினம் (05.09.2020) இரவு வீட்டில் இருந்து கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மண்டபம் பஸ் நிறுத்தம் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி பலமாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கடலூர் எஸ்.பி ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் ஆகியோர் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பயிற்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடினர்.
தட்டாஞ்சாவடியில் கொலையாளிகள் தப்பிச்செல்ல முயன்றபோது கொலையாளிகள் ஞானவேல்(21), குமரன்(21), கோபிநாத் (22), விஜயகுமார் (23), பிரகாஷ் (20), பிரதீப் (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் ரத்தக்கறை படிந்த ஆடைகளை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களுள் ஞானவேல் என்ற வாலிபர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், "சாந்தகுமாரின் உறவினர் சக்திவேல் என்பவர் எனது தங்கையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து விட்டார். எனது சகோதரியை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் சக்திவேல் ஏமாற்றியதற்கும், எனது சகோதரியின் திருமணம் நடைபெறாமல் தடைபட்டதற்கும் காரணமாக இருந்த சாந்தகுமாரை கொலை செய்ய திட்டம் போட்டோம். மண்டபம் பஸ் நிறுத்தத்தில் எனது நண்பர்களுடன் காத்திருந்தேன். அப்போது அங்குவந்த சாந்தகுமாரை சரமாரியாக தாக்கினோம். மயங்கி விழுந்த உடன் தப்பி ஓடிவிட்டோம். போலீஸ் எங்களை தேடுவதை அறிந்து வெளியூர் தப்பிச்செல்ல முயன்றபோது தட்டாஞ்சாவடி பகுதியில் போலீசார் எங்களை கைது செய்தனர்" என கூறியுள்ளார்.
கொலை நடந்த சில மணி நேரங்களில் கொலையாளிகளை கைது செய்த பண்ருட்டி போலீஸ் போலீசாருக்கு கடலூர் எஸ்.பி ஸ்ரீஅபிநவ், டி.எஸ்.பி.பிரபு பிரசாந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.