தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் தங்களின் கோரிக்கை மனுவை அப்போதைய ஆட்சியரிடம் அளிக்கத்திரண்டு வந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியானார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்புகள் வலியுறுத்தி கோரிக்கை மனுவை தூத்துக்குடி ஆட்சியர்செந்தில்ராஜிடம் அளித்தனர்.
கூட்டமைப்பினரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் அதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்அலுவலகம்.,தென்மண்டல ஐ.ஜி.அஸ்ராகார்க், மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன், டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் ஆகியோரின் பாதுகாப்பின் கீழ் வந்தது. எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், கடந்த 2018ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடந்த அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த மே18ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆணையத்தின் அறிக்கையை முழுதாக ஏற்றுக் கொள்வதாகத்தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்லவழக்கு தடை நீக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட 2 வழக்குகள் வாபஸ், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு துயர் துடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீதும், அதற்குத்துணைபோன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி ராகவன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, பாத்திமா பாபு, வியனரசு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கரும்பன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானசிலரது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.