/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/strelite-issue-art.jpg)
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி (22.05.2018) போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய வருவாய்த் துறை அதிகாரியான கண்ணன் உள்பட பல அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் துணை வட்டாச்சியர்களுக்கு வட்டாச்சியராக அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் கண்ணன் என்பவருக்கும் வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இந்த வன்முறை நிகழ்வு தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tuticorin-collector-ilambagavath-ias-art.jpg)
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்குக் கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு. கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து. கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)