/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3541.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியின் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் மகன் கீர்த்திக். இவர் அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கல்லூரி முடிந்ததும் கீர்த்திக் தனது நண்பர்களான செந்தில்குமார், அஜய், அருண்குமார், விக்னேஷ் உள்ளிட்ட மாணவர்களுடன் காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். சக மாணவர்கள் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் கார், இளையரசனேந்தல் கிராமத்தையடுத்த பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் கார் பெருத்த சேதத்துடன் உருண்டது. இந்தப் பயங்கர விபத்தில் கீர்த்திக், செந்தில்குமார், அஜய் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் இருவரும் படுகாயமடைந்தனர். தகவல் போய் சம்பவ இடம் வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் உள்ளிட்ட போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள், தொடர்ந்து படுகாயமடைந்த 2 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுப் பின்னர் மேல் சிகிச்சையின் பொருட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தனியார் பேருந்தில் காயமடைந்த தோட்டத் தொழிலாளி மாடசாமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணைநடத்தி வருகின்றனர். 3 கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)