Skip to main content

நோய் எதிர்ப்பு சக்திக்காக இலங்கைக்குக் கடத்த முயன்ற மஞ்சள் மூட்டைகள் சிக்கியது..!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Turmeric bundles caught trying to transport to Sri Lanka
                                                          மாதிரி படம்

 

தூத்துக்குடியின் மரைன் ஏரியாவிற்கு உட்பட்ட பகுதிகளில், அதன் இன்ஸ்பெக்டர் சைரஸ், வேம்பார் மரைன் எஸ்.ஐ தாமரைச் செல்வி உள்ளிட்ட போலீசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பிலிருந்தபோது, வேம்பார் கடற்கரையை ஒட்டிய பெரியசாமிபுரம் பகுதியில் வந்த டிராக்டரை மடக்கிச் சோதனையிட்டனர். அந்தசமயம், டிராக்டரில் இருந்தவர்களும், அதன் பின்னால் பைக்கில் வந்தவர்களும் தப்பியோடினர்.

 

மரைன் போலீசார் டிராக்டரை சோதனையிட்டதில், 34 மூட்டைகளில் விரளி மஞ்சள் இருப்பது தெரியவர, ஒன்றரை டன் எடை கொண்ட அவைகளையும், கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மஞ்சளின், தமிழ்நாட்டு மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

 

கடற்கரையை ஒட்டிய தரைப் பகுதியில் பிடிபட்டதால், அவைகளை மரைன் போலீசார் வேம்பார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய நான்கு பேர்களையும் தேடி வருகின்றனர்.

 

நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட மஞ்சள், தற்போதைய கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, இலங்கையில் தேவை இருப்பதால், அவைகள் கடத்தப்படுகின்றன. முறையாக அனுப்பினால் மஞ்சளின் மதிப்பிலிருந்து ஒன்றரை மடங்கு சுங்கக் கட்டணம் செலவு பிடிக்கும். மேலும், இலங்கையில் அதற்கு இரு மடங்கு விலை கிடைப்பதால், தூத்துக்குடி, ராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கடத்தப்படுகின்றன. சுங்க வரி ஏய்ப்புக்காகவும் கூடுதல் விலைக்காகவும் கடத்தப்படுவதாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்