
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கடந்த 25ஆம் தேதி (25.11.2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவெடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் கடந்த (02.12.2024) காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. அப்போது டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். மேலும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதுரையில் அமைக்கத் திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரத் தமிழக முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது மாநில அரசிடம் அனுமதி பெறாமல் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த தீர்மானம் சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் கொண்டு வரப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அதன்படி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை (09.12.2024) காலை 09.30 மணிக்கு மணிக்கு கூட உள்ளது. அப்போது மறைந்த சட்டமன்ற முன்னாள் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
அதன் பின்னர் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே மதுரை டங்ஸ்டன் சுங்க உரிமை ரத்து செய்திடவும் மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிமங்களுக்கான ஏல உரிமையை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தித் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் நாளான நாளை மறுநாள் (10.12.2024 - செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரம் முடிந்த பின்னர் துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் உறுப்பினர்கள் எழுதும் கேள்விகளுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க உள்ளார். அதன் பின்னர் கூடுதல் நிதி ஒதுக்குவதற்காகத் துணை பட்ஜெட்டில் தெரிவித்துள்ளபடி கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.