அறிக்கை, பேட்டி, ஆடியோ, வீடியோ என டி.டி.வி.தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் மோதல் வலுத்துவிட்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவது உறுதியாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் சேர்வதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலேயே, திமுகவுக்குச் செல்லும் நிலைக்குத் தங்க தமிழ்ச்செல்வன் தள்ளப்பட்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thanga tamilselvan poster.jpg)
கடும் சொற்களால் தினகரனை விமர்சித்ததால், அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணையவிருக்கும் நேரத்தில், பதிலடியாகத் தங்கள் பங்கிற்கு அவரைப் போஸ்டர்களில் திட்ட ஆரம்பித்திருக்கின்றனர் அமமுகவினர்.
தினகரன் ஒரு விரல் நீட்டி எச்சரிப்பது போல் இருக்கும் அந்தப் போஸ்டரில், தங்க தமிழ்ச்செல்வன் தலையில் மதுபாட்டில்கள் இரண்டைக் கவிழ்த்து, ‘மதுவால் மதிமயங்கி தங்கம் தகரம் ஆனதே.. உன்னை வன்மையாகக் கண்டிக்கிறோம்..’ என்ற வாசகங்களை இடம்பெறச் செய்திருக்கின்றனர். மதுரை உட்பட, பல ஊர்களிலும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
அரசியல் ஒரு சாக்கடை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அதனை நிரூபிக்கும் விதத்தில், இதுபோன்ற சுவரொட்டிகளும்கூட நாற்றத்தைப் பரப்புவதாக உள்ளன.
Follow Us