T. T. V. Dhinakaran

விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கலக குரல் வலிமையடைந்து வருகிறது.

அ.தி.மு.க.விலிருந்து தினகரனை விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அனைவரும் முடிவெடுத்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் சலசலப்புகள் கொஞ்சம் அதிகமாகவே எதிரொலித்த நிலையில், மாவட்டத்திலுள்ள ஞானமூர்த்தியும், பாலசுந்தரமும் தினகரனோடு இணைந்து செயல்பட்டனர்.

Advertisment

இதனால் செம உற்சாகமடைந்து விழுப்புரம் மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சித்தார் தினகரன். அ.ம.மு.க.வை ஆரம்பித்த போது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக உடைத்து தெற்கு மாவட்டத்தின் செயலாளராக ஞானமூர்த்தியையும், வடக்கிற்கு பாலசுந்தரத்தையும் நியமித்தார் தினா!

கட்சியை பலப்படுத்த ஓடியாடி வேலை செய்தார் ஞானமூர்த்தி. கள்ளக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபு, தினகரனோடு ஐக்கியமானபோது, அவரை மா.செ.வாக்க வேண்டிய நிர்பந்தம் தினகரனுக்கு ஏற்பட்டதால், தெற்கு மா.செ.பதவியிலிருந்து ஞானமூர்த்தியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பிரபுவை மா.செ.வாக நியமித்தார் தினகரன்.

Advertisment

இதனைக்கண்டு தினகரன் மீது கடும் அதிர்ப்தியடைந்தார் ஞானமூர்த்தி. இதனையறிந்த தினகரன், ஞானமூர்த்தியை சமாதானம் செய்ததோடு, வடக்கு மாவட்டத்திலிருந்து வானூர், விக்கிரவாண்டி தொகுதிகளையும், தெற்கு மாவட்டத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் தொகுதிகளையும் பிரித்து புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என உருவாக்கி அதன் செயலாளராக நியமித்தார்.

இதில் திருப்தியடைந்த ஞானமூர்த்தி, பழையபடி பூத் கமிட்டி அமைப்பதிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையிலும் சுறுசுறுப்புக் காட்டினார். இந்த நிலையில், திடீரென மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக தினகரனுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் ஞானமூர்த்தி.

இந்த சம்பவம் அ.ம.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன்? எதற்கு? என ஆராயாமல், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தினகரன், மத்திய மாவட்ட பொறுப்பாளராக, கட்சியின் அமைப்பு

செயலாளராக இருந்து வரும் ரிஷிவந்தியம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜீவை நியமித்திருக்கிறார்.

அவரது ராஜினாமா பரபரப்பாக எதிரொலிக்கும் நிலையில், இதுகுறித்து தினகரன் கட்சியினரிடம் விசாரித்தபோது, "ஞானமூர்த்தியை மா.செ.வாக தினகரன் நியமித்திருந்தாலும் மாவட்டத்திலிருக்கும் சிலரின் அழுத்தங்களுக்குப் பணிந்து ஞானமூர்த்தியை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. மேலும், மாவட்டத்தில் உள்கட்சிப் பிரச்சனையை உருவாக்க முயற்சிக்க, இதற்கு காரணமானவர்கள் குறித்து தினகரனிடம் புகார் வாசித்தார் ஞானமூர்த்தி.

ஆனால் இவரது புகார்களை தினகரன் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஞானமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் வெறுத்துப் போனார்கள். அதன் பிறகு பலமுறை ஆலோசித்தார் ஞானமூர்த்தி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை? என அவரது ஆதரவாளர்களும் அவரது சமுதாயத்தினரும் வலியுறுத்திய நிலையில் தான் ராஜினாமா முடிவை எடுத்தார் அவர்.

அவரது விலகல், அ.ம.மு.க.விற்கு பெரிய பின்னடைவுதான். இப்போதெல்லாம் எடுப்பார் கைப்புள்ளைப் போல் அரசியல் செய்கிறார் தினகரன். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி கலகலத்து விட்டது" என்கின்றனர் அ.ம.மு.க.வின் மேலிட நிர்வாகிகள்.

இந்த சூழலில், ஞானமூர்த்தியின் ராஜினாமா விவகாரத்தால், விழுப்புரம் அ.ம.மு.க.வில் கலகக் குரலை உரத்து எழுப்புகின்றனர். இதனால் மாவட்டத்தில் தினகரனின் கட்சி தடுமாறத் துவங்கியிருக்கிறது.

இதனை அறிந்த அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், ஞானமூர்த்தியை தாய்க்கழகத்தில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.