அதிமுக அரசு பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு இன்று காலை டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் சரிவர செயல்பட முடியவில்லை. எம்.எல்.ஏ. பணிகளை செய்ய மாவட்டத்தில் முட்டுக்கட்டை போடப்படுகிறது அதனால் டிடிவி தினகரனுக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
டிடிவி தினகரன் அணி தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது, அவர்களைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், நாங்கள் விழிப்புடன் உள்ளோம். எங்கள் அணி பெரும்பான்மை கொண்டு பலமாக இருக்கிறது.
2021ல் கூட அதிமுக ஆட்சி அமைக்கும், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அணி மாறியது குறித்து எனக்குத் தகவல் தெரியாது, இதுகுறித்து விசாரித்து பதிலளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Follow Us