
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டங்களில் அமமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில்தான் இன்று தேனி பங்களாமேட்டில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும் கலந்து கொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்டத்திலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி. தினகரன் பேசும்போது, “90 சதவீதம் தொண்டர்கள் ஓபிஎஸ் மற்றும் எங்கள் பின்னால் உள்ளார்கள். கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்று உங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும். மூன்று மாதத்தில் கொடநாடு குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் என்று தேர்தலின் போது கூறினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தாண்டி விட்டது. இந்த வாக்குறுதியை மறந்து விட்டார்.
சட்டமன்றத்தில் கொடநாடு குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று கூறினார்கள். ஓபிஎஸ் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அவர் அழைக்க வேண்டும் என்று இல்லை, நாங்களாகவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதனால் நானே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். ஓபிஎஸ் தொண்டர்களும், அமமுக தொண்டர்களும் வருத்தங்களை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். அம்மா என்ற மையப்புள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து விட்டோம். இங்கு இருப்பவர்கள்தான் தொண்டர்கள் அங்கு இருப்பவர்கள் குண்டர்கள். அவர்களுக்கு விஸ்வாசம் என்பது தெரியாது. நாங்கள் இருவரும் இணைந்திருப்பது பதவிக்காக அல்ல. சுயநலத்திற்காக அல்ல. ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தவர். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அவர்களிடம் இருந்து மீட்பதற்காகவே நாங்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம். கொடநாடு குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கண்டன கூட்டம் நடக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய ஓபிஎஸ், “கொடநாடு குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கண்டன கூட்டம் நடக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிக்கு தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். நாம் அனைவரும் மக்கள் செல்வர் என அன்போடு அழைக்கும் டிடிவி. தினகரன் சார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. மூன்று மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளை கைது செய்வோம் என்று கூறி தான் தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்தார். முப்பது மாதங்களில் இந்த வழக்கை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும். கொடநாடு சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு மின்சாரத்தை துண்டித்தது யார்? என்று கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த விவகாரத்தில் நீதி தாமதமானால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்று கூறினார்.