ADVERTISEMENT

தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - டிடிவி தினகரன் 

02:53 PM Jan 20, 2024 | ArunPrakash

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகநீதியைப் பாதுகாக்கவும், கல்வி, வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் முதன்முறையாக பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாகத் தொடங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT