ttv dhinakaran  condemns Should Ponmudi continue as a minister

தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், பெண்கள் குறித்தும், சைவ - வைனவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலரும் எதிர்வினையாற்றி வந்தனர்.

சொந்த கட்சியான திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தனது எதிர்பை பதிவு செய்திருந்தார்.

Advertisment

ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் பூதகரமாக மாறியது. இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இந்த நிலையில் பொன்முடியின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது - இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடியின் செயல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.