TTV Dhinakaran Condemns Forest Officer For Forcibly Evicting Aborigines

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

Advertisment

வனப்பகுதிகளில் தங்கி கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பூர்வகுடிகளின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, உடமைகளை உடைத்தெறிந்திருப்பதுடன், குடியிருப்புவாசிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றியிருக்கும் வனத்துறையின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தலைமுறை, தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு, வனத்துறையின் மூலம் வன்முறையை கையாண்டு பூர்வகுடிகளை அப்புறப்படுத்தியிருப்பது தமிழக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.

Advertisment

எனவே, வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பூர்வகுடிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில், அவர்கள் விரும்பும் வனப்பகுதியிலேயே வசிப்பதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என வனத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.