ADVERTISEMENT

டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

10:13 AM Oct 07, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவல் 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி வரை நீட்டித்து மேலும் 15 நாட்களுக்கு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் டி.டி.எப்.வாசன் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் 2 முறை நிராகரித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT