“Trying to hide facts by attacking journalists?”- Seeman condemns Nakeeran for attacking reporters.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். முதலில் தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதேசமயம் நக்கீரனில் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியாளர்கள் மீதான இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும், திரைப் பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

Advertisment

நாடறிந்த ஊடகமான நக்கீரன் பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங்களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதியரசர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இனிமேலாவது, தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர்புடையக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமெனவும், பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.