Advertisment

தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க முயற்சி: திமுக மீது எடப்பாடி பழனிசாமி புகார்!

அமமுக தலைவர் டிடிவி தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க திமுக முயற்சிப்பதாக சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisment

திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று (செப். 25) மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:

Advertisment

edapadi

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக்கானோரை கொன்று குவித்தார்.

அந்தப் போரில், இந்திய அரசு உதவியதாக சமீபத்தில் டெல்லி வந்திருந்த ராஜபக்சே சொல்லிவிட்டார். காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்து செய்த போர்க்குற்றத்தை சர்வதேச நீதிமன்றம், மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று திமுக கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

திமுக, ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி. கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பின்னர் அவருடைய மகன் என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வருகின்றனர்.

திமுகவில் ஸ்டாலின் வந்தவிதம் வேறு. அதிமுகவில் நான் வந்த விதம் வேறு. நானும், ஸ்டாலினும் 1989ம் ஆண்டுதான் எம்எல்ஏ ஆக ஆனோம். ஆனால், பகுதி செயலாளராக இருந்து உழைத்து, இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். கருணாநிதியின் உதவியால் எம்எல்ஏ ஆக, துணை முதல்வராக, கட்சித் தலைவராக வந்தவர் ஸ்டாலின். நான் கொல்லைப்புறமாக வரவில்லை. ஸ்டாலின்தான் அப்படி வந்தவர். அவரோடு உதயநிதியும் வந்துவிட்டார்.

என்னுடைய உறவினர்களுக்கு நெடுஞ்சாலை டெண்டர் கொடுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர் குறிப்பிடும் நபர் எனக்கு உறவினராகி மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், 2010ம் ஆண்டில் மட்டும் அவருக்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக, 10 டெண்டர்களை கொடுத்துள்ளது. நான் வழங்கியது, இ&டெண்டர். இதில் ஊழலே செய்ய முடியாது.

கருணாநிதி ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதற்கு முதல்கட்டமாக 200 கோடி ரூபாயில் டெண்டர் வழங்கி, பின்னர் திட்டத்தை விரிவுபடுத்தி 485 கோடி ரூபாய்க்கு கூடுதல் டெண்டர் வழங்கினர். எனவே, ஜெயலலிதா விசாரணை கமிஷன் அமைத்தார். ஆனால், விசாரணை நடத்த விடாமல் 6 ஆண்டுகள் தடை ஆணை பெற்று வந்தனர். தற்போது, அந்த விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இனிமேல் தெரியும் பாருங்கள். நாங்கள் விட்டாலும் மக்கள் விடமாட்டார்கள். திமுக ஆட்சியில் இருந்தபோது காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறைந்திருக்காது.

டிடிவி தினகரனை வைத்து அதிமுகவை உடைக்க திமுக முயற்சிக்கிறது. விபத்தில் எம்எல்ஏவான தினகரன், ஆர்கே.நகரில் நுழைய முடிகிறதா? சசிகலா மூலமாக அதிமுகவில் நுழைந்தவர்கள், கட்சிக்கு தலைவராக பார்க்கின்றனர். அதிமுகவில் கொல்லைப்புறமாக கொள்ளையடித்துச் சென்றவர்கள், இப்போது கட்சியை அழிக்கப் பார்க்கின்றனர். சசிகலா, குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை ஆரம்பிக்கின்றனர்.

வரும் 2019ம் ஆண்டில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 74 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் இப்போதே தயாராக இருக்கின்றனர். இந்த மாநாட்டில் 2.30 இலட்சம்ரூபாய் முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளோம்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஆனால், எங்கள் ஆட்சியைப் பார்த்து ஊழல் ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். வரும் தேர்தலில் அதிமுகவின் வலிமை தெரியும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

stalin ammk admk edappadi pazhaniswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe