Skip to main content

கிரில் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த வழக்கில் அம்பலமான உண்மை

 

The truth exposed case of grill workshop owner passed away

 

சேலத்தில் இரும்பு கிரில் பட்டறை உரிமையாளரை தீர்த்துக்கட்ட ஈரோட்டைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.    

 

சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மன் செட்டி சாலையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் பள்ளப்பட்டி ஜவஹர் மில் அருகே கோரிக்காடு பகுதியில் இரும்பு கிரில் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவக்குமாரும் அவருடைய ஊழியர்கள் சாரதி (19), பாஸ்கர் (45) ஆகியோரும் வழக்கம்போல் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் திடீரென்று பட்டறைக்குள் புகுந்து, சிவக்குமாரை  சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த ஊழியர்களையும் வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராற்றில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவக்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரிய  வந்தது. சிவக்குமாருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் திருமலைகிரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்துள்ளார். சிவக்குமாரின் தந்தை இறந்துவிட்டதை அடுத்து, ஏழுமலை குடியிருந்து வந்த வீட்டை விற்பனை செய்ய இருப்பதால் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். அப்போது ஏழுமலை தரப்பில், வீட்டை தானே வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சிவக்குமார், வீட்டை 25.90 லட்சம்  ரூபாய்க்கு விற்க சம்மதித்துள்ளார். 

 

மேலும், ஏழுமலையிடம் இருந்து முன்பணமாக 4.90 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். ஆனால் மீதப்பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார் ஏழுமலை. இதற்கிடையே வீட்டின் சந்தை மதிப்பு தற்போது 90 லட்சம் ரூபாயாக உயர்ந்து விட்டதாகக்கூறி, சிவக்குமார் கூடுதல் தொகை கேட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே இருதரப்பினருமே அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சமரசம் செய்ததை அடுத்து, ஏழுமலை மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை ஜனவரி இறுதிக்குள் தருவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார்.  ஆனாலும் வீட்டை கிரயம் செய்வது தொடர்பாக ஏழுமலையின் மருமகன் பாபு, சிவக்குமாருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.       

 

இந்நிலையில் ஏழுமலையின் மருமகன் பாபுதான் ஈரோட்டைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை 1.50 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, சிவக்குமாரை தீர்த்துக்கட்ட அழைத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜன. 31 ஆம் தேதி பள்ளப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி  முனையில் அவரிடம் இருந்த 1900 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்ததில் பாபு, விமல்ராஜ், கிஷோர், மாரியப்பன் ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் மாரியப்பன் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று பேரை கைது செய்தனர். கிரில் பட்டறை உரிமையாளர் சிவக்குமார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பாபு வழிப்பறி வழக்கில் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இவர்களுடன் பிடிபட்ட கிஷோர் என்ற வாலிபர்தான், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சிவக்குமாரின் பட்டறை அருகில் இறக்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படை கும்பலைத் தேடி தனிப்படை காவல்துறையினர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !