Trucks imprisoned Owners pour rice on the road and block the road

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான அறுவடைகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். அவ்வாறு அறுவடை செய்த நெல்மூட்டைகளைதனியார் அரிசி மில் உரிமையாளர்கள், வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று கொள்முதல் செய்கின்றனர்.

Advertisment

விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தனிநபர்களோ? வியாபாரிகளோ? நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்துகொண்டு சென்றால்,வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட விதிமுறைப்படி ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும். அவ்வாறு விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து வரி செலுத்தாமல் சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதிகளுக்கு 30க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 100 டன்னுக்கும் மேலாகக் கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளை வேளாண் வாகனத் தணிக்கை குழுவினர் மறித்துச் சிறை பிடித்தனர். பின்னர், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்திய பின்பு ஒரு சில லாரிகள் அனுப்பப்பட்டன.

Advertisment

இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குச் சந்தை வரி கட்டமுடியாது என்று, நெல் கொள்முதல் செய்த ஆலை உரிமையாளர்கள் விருத்தாசலம் புறவழிச்சாலையில் நெல் மூட்டைகளைச் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன், நெல் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுடன் சார் ஆட்சியர் பிரவின்குமார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாகப் புறவழிச் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.