Truck driver theft  money incident

சென்னை வெங்கம்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 53). இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதே வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் உதயகுமார் (வயது 35) என்பவரிடம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து நாமக்கலில் முட்டை கொள்முதல் செய்து கொண்டு (வாங்கி) வருமாறு அனுப்பியுள்ளார். அதன்படி பணத்துடன் உதயகுமார் நாமக்கல்லுக்கு சென்னையிலிருந்து லாரியில் புறப்பட்டு சென்றார். அப்படி செல்லும் வழியில் நேற்று அதிகாலை திண்டிவனம் அடுத்த சலாவுதீன் பைபாஸ் சாலை அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது நான்கு பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று தன்னைத் தாக்கி விட்டு, தான் வைத்திருந்த 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக முட்டை வியாபாரி ராஜகுமாரிக்கு உதயகுமார் செல்பேசி மூலம் தகவல் அளித்துள்ளார்.

Advertisment

இந்த தகவலை கேட்டு பதறிப்போன ராஜகுமாரி தனது வழக்கறிஞர் ஒருவர் மூலம் மேற்படி விவரத்தை திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன், ஆய்வாளர் வள்ளி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், வினோத் ராஜ் விரைந்து சென்றனர். அங்கு இருந்த உதயகுமாரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது லாரி டிரைவர் உதயகுமார் முரண்பாடாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஓட்டுநர் உதயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரணை செய்துள்ளனர். அப்போது பணத்தைத் யாரும் கொள்ளை அடிக்கவில்லை பேராசை காரணமாக தானே அந்த பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு மர்மநபர்கள் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றதாக உதயகுமார் கூறியுள்ளார்.

Advertisment

இதனால் பணம் கொள்ளை போனதாக உதயகுமார் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரும் காவல் நிலையம் வந்து விசாரணை செய்ததோடு உதயகுமார் மறைத்து வைத்திருந்த 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து முட்டை வியாபாரி ராஜகுமாரியை சென்னையில் இருந்து வரவழைத்த காவல்துறையினர் அவரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

Truck driver theft  money incident

பணத்தைத் தானே மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக போலீசாரிடம் நாடகமாடிய உதயகுமார் மீது ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர். முட்டை வாங்குவதற்கு கொடுத்தனுப்பிய பணத்தை யாரோ திருடியதாக நாடகமாடிய உதயகுமாரின் செயல் திண்டிவனம் பகுதியில் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம் பணம் பறிப்பதற்காக நாடகமாடுகிறார்கள் என்பதற்கு உதயகுமாரின் செயல் ஒரு உதாரணம் என்கிறார்கள் காவல்துறையினர்.

Advertisment