Skip to main content

பெரும் விபத்து மூன்று பேர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

truck collided with two wheeler Cuddalore

 

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்துள்ள கொடிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்.

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கஞ்சமலப்பட்டியைச் சேர்ந்தவர்  கோபி (21), அருள் முருகன் மனைவி செல்வி(45), இருங்கலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராதாவின் மனைவி சமத்துவம் (45), இவரது மகன் ராஜ்குமார்(14), அதே கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்(12) இவர்கள் அனைவரும் உறவினர்கள்.

 

நேற்று காலை சூப்பர் எக்செல் என்ற இருசக்கர வாகனத்தை கோபி  ஓட்டி வந்துள்ளார். கோபியுடன் ராதா மனைவி சமத்துவம் மற்றும் அருள் முருகன் மனைவி செல்வி மற்றும் ராதா மகன்  ராஜ் குமார் மற்றும் கொளஞ்சி நாதன் மகன் வெற்றிவேல் ஆகிய ஐந்து பேரும் நெய்வாசல் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு ஒரே வாகனத்தில் திரும்பும் போது கொடிக்குளம் பஸ் நிலையம் அருகே-விருத்தாசலம் - திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது அரியலூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கோபி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது.  அதில் சம்பவ இடத்திலேயே கோபி மற்றும் சமத்துவம் இருவரும் உயிரிழந்துள்ளனர். 

 

செல்வி, ராஜ்குமார் மற்றும் வெற்றிவேல் ஆகிய மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வி, வெற்றிவேல், ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இவர்கள் அனைவரும் அடுப்புக்கறி எடுக்கும் தொழிலை செய்து வரும் கூலித் தொழிலாளர்கள். விபத்து ஏற்படுத்திய லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பன்னீர் கோட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 59 வயது மனோகரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து டிரைவர் மனோகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

 

இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. கருவேப்பிலங்குறிச்சி - ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில், அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம் அரியலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயங்குகின்றன. அந்த ஆலைகளுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பொது போக்குவரத்து பேருந்துகள் இப்படி தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிவேகமாக இந்தச் சாலையில் செல்கின்றன. இப்படி வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்த எந்த அதிகாரிகளும் முன் வருவதில்லை.

 

மேலும் இந்தச் சாலையில் அதிக அளவு விபத்துகளை ஏற்படுத்தும் இடங்கள், ஒன்று கொடிக்குளம் - குடிக்காடு பேருந்து நிலையம் இடையில் உள்ள பொதுப்பணித்துறை வாய்க்கால் வளைவு. இரண்டு, கோழியூர் - பட்டூர் இடையில் உள்ள ஆபத்தான வளைவு. மூன்று, கோழியூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வளைவு. இந்த மூன்று இடங்களிலும் U வடிவ வளைவுகள் உள்ளதால் சுமார் 10 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்குத் தெரியாது. மேலும் இதுபோன்ற இடங்களில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயலும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி மிக அதிகமான விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் தொடர்கின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மூன்று இடங்களில் வேகத்தடை அமைத்து விபத்துகளைத் தடுத்து மனித உயிர்களைக் காப்பாற்ற முன் வரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்