Skip to main content

கோவில் வழிபாட்டில் பிரச்சனை; சுமுகத் தீர்வு தந்த மாவட்ட ஆட்சியர்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

கரூரில் கோவில் வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரால் பூட்டப்பட்டிருந்த கோவில் திறந்து வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மேலப்பகுதி கிராமம், வீரணம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா 06.06.2023 அன்று தொடங்கியது. திருவிழாவின் போது 06.06.2023 அன்று, வீரணம்பட்டியைச் சேர்ந்த ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞரை, அவ்வூரைச் சேர்ந்த சிலர் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வரப்பெற்றது. மேற்படி தகவல் தெரிந்ததும், சம்பவ இடத்திற்குச் சென்ற கடவூர் வட்டாட்சியர், மேற்படி நிகழ்வு தொடர்பாக இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

ஊராளி கவுண்டர் இன மக்கள், மேற்படி ஸ்ரீ காளியம்மன் கோவில், வீரணம்பட்டி உள்ளிட்ட 8 ஊர்களைச் சேர்ந்த ஊராளி கவுண்டர் தரப்பின் குடிபாட்டுக்கோவில். தங்கள் தரப்பைச் சார்ந்த குடிபாட்டுக்காரர்களிடமிருந்து வீட்டிற்கு தலா ரூ.20,000/- தலகட்டு வரியாக விதித்து வசூல் செய்யப்பட்டு, கோவில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அக்கோவிலின் உரிமை தங்கள் சமூகத்தினருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் வரை, இருதரப்பினரும் கோவில் மண்டபத்திற்கு முன்புறமாக நின்று வழிபாடு செய்து கொள்வதாக இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

 

08.06.2023 அன்று குளித்தலை உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர், இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் வரை கோவிலுக்குள் இருதரப்பினரும் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டு, இருதரப்பினர் முன்னிலையில் ஸ்ரீ காளியம்மன் கோவில் தற்காலிகமாக பூட்டி வைக்கப்பட்டது.  கோவில் பூட்டப்பட்டதை விரும்பாத சிலர், கோயில் விரைவாகத் திறக்க வலியுறுத்தும் விதமாக சாலை மறியல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரால் இரு தரப்பினரிடமும் பேசி முடிவு செய்த பின்னர் கோவில் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

14.06.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரில் இருந்து கலந்துகொண்ட அனைவரின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் தரப்பினர் மேற்கண்ட கோவிலில் தாங்கள் வழிபட வழிவகை செய்து தருமாறு கோரினர். ஊராளி கவுண்டர் தரப்பினர், தங்கள் இனத்தைச் சார்ந்த கோவிலுக்கு உரிமையுடைய 8 ஊர்களைச் சேர்ந்தவர்களும் இது குறித்துப் பேசி வருவதாகவும், இரண்டு தினங்களில் தங்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக நல்ல முடிவை எடுத்து தெரிவிப்பதாகக் கூறினர்.

 

அதன்படி ஊராளிகவுண்டர் சமூகத்தினர் 8 ஊர்களைச் சார்ந்தவர்களும் ஒருசேர சேர்ந்து ஒருமனதாக முடிவு செய்து, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சென்று வழிபடுவதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்பதை தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே நிலவி வந்த அசாதாரண சூழல் களையப்பட்டு, சமூக நீதி நிலைநாட்டப்பட்டு, இருதரப்பினரும் மேற்படி கோவிலில் ஒற்றுமையோடு வழிபாடு செய்ய ஏதுவாக இன்று 21.06.2023 மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கோவில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

 

இதன் பிறகு அந்த பகுதி மக்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ''ஊர் ஒற்றுமையாக நல்ல அமைதியா இருக்கணும். அனைவரும் சமம். அனைவரும் வழிபடலாம் என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த அமைதியை நிலைநாட்டுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. இனிமேல் இந்த ஊர் நல்ல விஷயத்திற்கு ஒரு பெயர் வாங்கி தர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்கள் ஊர் வளர்ச்சிக்காக ஒன்றரை கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியர் ஆகிய நானே ஒதுக்கி இருக்கிறேன். சின்ன சின்ன நெருடல்களை எல்லாம் விட்டுவிட்டு அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கிற முக்கியமான உரிமையை நானும், எஸ்பி சாரும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

 

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அண்ணன் தம்பிக்குள் பேசிக் கொள்வதை போல் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் பெரிய பிரச்சனையாக வளரவிடக்கூடாது. ஒற்றுமையாக இருந்தால் ஊருக்கும் பெருமை உங்களுக்கும் நன்மை. தொடர்ந்து இப்படி நடந்து கொள்வீர்களா? விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். சின்ன பசங்க, இளைஞர்களை சரியான வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். சண்டை போடாமல் சந்தோசமாக இருக்க வேண்டும். அடுத்து இந்த ஊரின் பெயர் நல்ல விஷயத்துக்கு தான் பேப்பரில் வர வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மார்க், டாக்டர் ஆனார்கள், ஐஏஎஸ் ஆனார்கள் அப்படித்தான் வீரணம்பட்டி பேர் பேப்பர்ல வர வேண்டும். வருமா செய்வீர்களா? வாழ்த்துக்கள்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

பிற ஊர்களுக்கு முன்மாதிரியாகவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், ஒற்றுமையை பேணிக் காக்கும் வகையிலும் செயல்பட்ட வீரணம்பட்டி கிராம மக்களைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், மேலப்பகுதி கிராம ஊராட்சிக்கு சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. 

Nilgiris Collector Explains Strong Room CCTV Cameras Malfunction

இந்நிலையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தகது. 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.