'Trilingual policy is a fraudulent policy; bilingual policy is a deceptive policy' - Interview with Thavaga leader Velmurugan

'புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்' என்ற மத்திய அமைச்சரின் பேச்சை தொடர்ந்து தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், இந்த திணிப்பை எதிர்த்தும் திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினர் நேற்று கையெழுத்து இயக்கம் ஆரம்பித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''தமிழக வாழ்வுரிமைக் கட்சியைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை ஒரு மொழிக் கொள்கையே உன்னத கொள்கை. உலகத்தின் எல்லா மக்களும் அவரவர்கள் தத்தம் தாய்மொழியில் தான் படிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். ஆதலால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை எங்கள் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ்மொழி கல்வி பின்பற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Advertisment

அதே நேரத்தில் உலகை தொடர்பு கொள்கின்ற மொழியாக ஆங்கிலம் இருக்கின்ற காரணத்தினால் ஆங்கிலமும் கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தவித தடையும் இல்லை என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கருத்து. ஒவ்வொரு இனமும் தத்தமது தாய்மொழியில் தான் இந்த உலகம் இயங்குகிறது. தாய் மொழியை இழந்த இனம் தத்தமது வரலாற்றை இழந்து இருக்கிறது. ஆதலால் நாங்கள் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான எங்கள் தமிழ் மொழியை எங்கள் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில், மாநில அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும். கல்விக்கூடங்களில் அது பயிற்று மொழியாக இருக்கவேண்டும். அதனால் தான் ஆரம்பக் கல்வியில் இருந்து ஆராய்ச்சி கல்வி வரையில் எங்கள் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு தமிழ் எழுத, படிக்க, பேச தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்ற நிலை இருக்கிறது. இந்த நிலை மாற தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில்கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.