trichy thiruverumbur joint family engagement incident 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஐஏஎஸ் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரது இளைய சகோதரர் தேவேந்திரன் மற்றும் மேலும் இரு சகோதரர்கள் குடும்பங்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சொந்தமாக பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், மற்றொரு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்த விழா நேற்று காலை நடைபெற்றது. அதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் நேதாஜி குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த மர்ம நபர்கள், நேதாஜி வீட்டிற்குள் பட்டப்பகலில் நுழைந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, வீட்டில் இருந்த சென்சார் கருவியையும் உடைத்து, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நிச்சயதார்த்த விழா முடிந்து வீடு திரும்பிய நிலையில், திருட்டு சம்பவம் நடந்திருப்பது கண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்ததும் திருவெறும்பூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் அறிவழகன், ஆய்வாளர் சந்திரமோகன், பெல் காவல்நிலைய ஆய்வாளர் கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து தடயவியல் பிரிவு ஆய்வாளர் அச்சுதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு துப்புத்துலக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுஜித் குமார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிஐஜி சரவணசுந்தர் கூறுகையில், "இந்த வீட்டில் 150 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் கொள்ளை போய் உள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தடயவியல் பிரிவு போலீசார் மற்றும் மற்றும் மோப்பநாய் கொண்டு துப்புத்துலக்கப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளையர்களை பிடிக்க திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், பெல் காவல்நிலைய ஆய்வாளர் கமலவேணி, துவாக்குடி ஆய்வாளர்ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், அவர்களது வீடுகளை இரவு நேரத்தில் ரோந்து பணியில் போலீசார் கண்காணிப்பார்கள். அதை பொதுமக்கள் உணர்ந்து வெளியூர் செல்வதற்கு முன்பு காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.