/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_3.jpg)
திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடக்கு குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி சுபாஷினி (வயது 38). இவர் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் துறையூர் திருத்தலையூர் பொன்னர் சங்கம்பட்டி பகுதியில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் 17 வயது சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்து மகளிடம் காதலை கைவிடுமாறு வற்புறுத்தினார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியின் பிறந்தநாளின்போது காதலன் அந்த மாணவியுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதனை அறிந்த சுபாஷினி மகளை மீண்டும் கண்டித்தார். இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுபாஷினி தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)