
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. இருந்தும் வாகன ஓட்டிகள் வீட்டுக்குள் முடங்காமல் மீண்டும் பல்வேறு காரணங்களை காட்டி நகரப்பகுதிகளில் சுற்றித்திரிய ஆரம்பித்துள்ளனர்.
திருச்சி நகரப் பகுதி முழுவதும் சாலைகள் அடைக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. காவல்துறையும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்தாலும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை இன்றுவரை குறையாமல் உள்ளது.
காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர வேண்டிய வாகன ஓட்டிகள், குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து அதிக அளவில் வெளியே சுற்றித் திரிவதால் திருச்சியில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வர ஆரம்பித்துள்ளது. பலரும் மருத்துவமனைக்கு செல்வதாகவும் மருந்துகள் வாங்க செல்வதாகவும் பல்வேறு காரணங்களை முன்வைத்தாலும் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்றால் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டபோது அத்துமீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவர்களுடைய வண்டிகளை அவர்களுடைய அபராத தொகையை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுத்து வந்தனர். தற்போதும் காவல்துறை தன்னுடைய கடமையை செய்ய ஆரம்பித்து இன்று முதல் காரணமில்லாமல் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பை செயல்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பத்து வண்டிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆரம்பித்துள்ளனர் போலீஸார்.