Trichy police in hype

Advertisment

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசியத்தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆலோசனையின்படி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட திடீர்நகர், பொன்மலை நார்த்டி குடியிருப்பு எல்லைக்கு விரைந்தனர்.

நார்த்டி, திடீர் நகர் எல்லையில் உள்ள ஆள் அரவமற்ற முட்புதர் பகுதியில் ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளைக் கைப்பற்றினர். பின்னர், அந்த வெடிகுண்டுகளைப் பாதுகாப்பு கருதி மணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடியான குட்ட பாலு என்பவர் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து முள்ளுக்காட்டில் பதுக்கி வைத்திருந்ததாகத்தெரியவந்துள்ளது. ரவுடி குட்டபாலு வேறு ஒரு ரவுடியை மிரட்டுவதற்காகவும், பல்வேறு அடிதடி, கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையமுன்னாள் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் மகனுக்கும் இந்த வெடிகுண்டு பதுக்கலில்தொடர்பிருப்பதாக தெரிய வந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து குட்ட பாலு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் ரவுடியை வலைவீசித்தேடி வருகின்றனர்.