Trichy person passed away in Brunei

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஆவுடையார்கோயில் அருகில் உள்ள மைனாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பிற்காக தனது மனைவி ராஜலெட்சுமி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்கோட்டை மாவட்டம், முக்கணாமலைப்பட்டி ஜாபர் அலி என்பவரின் புரூணை நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு உறவினர்களிடம் கடன் வாங்கி வேலைக்கு சென்றார்.

சில மாதங்களில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் 16.09.2022 அன்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், காய்ச்சல் குணமாகாமல் கோமா நிலைக்கு போய்விட்டதாக தகவல் கூறியுள்ளனர். கட்டுமான நிறுவன முதலாளி ஜாபர் அலி சுரேஷுக்கான சிகிச்சை பற்றி அடிக்கடி சுரேஷ் வீட்டிற்கு தகவல் கூறியுள்ளார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், தனது கணவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜேஸ்வரிமத்தியமாநில அரசுகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனால், சிகிச்சையில் இருப்பதால்இந்தியா அழைத்து வர முடியாத நிலையில் உள்ளார் என தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், 2022 டிசம்பர் 25ம் தேதி சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ராஜலெட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தன் கணவர் தங்களை விட்டு பிரிந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு கதறி அழுத ராஜலெட்சுமி தனது கணவரை உயிருடன் தான் அழைத்து வர முடியவில்லை. தற்போது உயிரிழந்த நிலையிலாவது கணவரின்உடலை மீட்டுத் தாருங்கள் என மாவட்ட ஆட்சியர் முதல்எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோருக்கு மீண்டும் கோரிக்கை மனு அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ராஜலெட்சுமியின் மனுவை சென்னை வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கும், பொதுத்துறை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். ஆனால் சிகிச்சைக்கான பணம் ரூ. 24 லட்சம் கட்ட வேண்டும் என்ற பதிலே கிடைத்தது. வறுமையில் வாடும் குடும்பம் எங்கிருந்து ரூ. 24 லட்சம் பணம் கட்ட முடியும். குடும்ப வறுமையை போக்க சுரேஷ் வெளிநாடு செல்ல வட்டிக்கு வாங்கிய கடன் கூட கட்ட முடியாத நிலையில் இரண்டு குழந்தைகளைவைத்துக் கொண்டு நிர்க்கதியாய் நிற்கிறார் மனைவி ராஜலெட்சுமி என்பதுஉறவினர்களின் கதறலாக இருந்தது.

இந்த நிலையில் தான் புரூணை வாழ் தமிழ் சமுதாயம், இந்தியன் அசோசியேசன் இணைந்து கரம் கோர்த்து அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வசூலித்த பணம் மற்றும் தூதரகம் மூலம் கிடைத்த தொகையோடு, நிறுவன முதலாளி ஜாபரின் பங்கு தொகை வசூலித்து பாதித் தொகையை கட்டி மீதி தொகையை முதலாளி ஜாபர் கட்டுவதாக உறுதி அளித்த பிறகு 55 நாட்களுக்கு பிறகு சுரேஷின் உடலைப் பெற்றுள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை இரவு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, புதன் கிழமை காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Advertisment

முகம் தெரியாத ஒருவரின் உடலாக இருந்தாலும்கூட கடைசியாக அவரது முகத்தையாவது அவரது மனைவி, மக்கள், சொந்தங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நாள் கணக்கில் உழைத்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறுகின்றனர் சுரேஷ் உறவினர்கள்.