
திருச்சி என்றாலே முதலில் சொல்லப்படுவது மலைக்கோட்டையாக இருந்தாலும் அடுத்ததாக சொல்லப்படுவது காவிரிதான். ஸ்ரீரங்கத்தை திருச்சியோடு இணைக்கும் முக்கிய தரை வழிப்பாதை இந்தக் காவிரி ஆற்றுப் பாலம். அதன் பொருட்டும் இது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சுமார் 45 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தில் இன்றும் பலர் தங்களுடைய ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்காக பாலத்தின் மீது நின்று, காவிரி ஆற்றிலிருந்து புறப்பட்டுவரும் நீரையும், குளிர்ந்த காற்றையும் ரசித்து அனுபவித்துவருகின்றனர். ஆனால், இந்தக் காவிரி பாலத்தின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது.

பாலத்தின் மேல் பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலையில் ஏற்படும் குண்டு குழிகளைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதேபோல் இப்பாலத்தின் தூண்களும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் உறுதித் தன்மையை இழந்துவருகிறது. எப்பொழுதும் பழுது பார்த்துக்கொண்டே இருக்கும் இந்தக் காவிரி பாலத்திற்குப் பதிலாக புதிய பாலத்தைக் கட்டினால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.
1976இல் கட்டப்பட்ட இந்தப் பாலம், தற்போது கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அதனுடைய உறுதித் தன்மையை இழந்துவருகிறது. அதையும் மிஞ்சி கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஏற்படும் அதிர்வு, காற்று வாங்க வருபவர்களுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே தொடர்ந்து மராமத்துப் பணிகள் செய்வதற்குப் பதிலாக புதிய பாலத்தையே கட்டினால் சிறப்பாக இருக்கும் என்பது திருச்சி மக்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.