பிரபல ரவுடியை தூக்கிய போலீஸ்! கிலியில் திருச்சி ரவுடிகள்! 

Trichy pattarai suresh taken by police

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குருச்சியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் என்பவரை திருச்சி மாவட்ட எல்லையான சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் முறையில் திருச்சி போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அந்த பரபரப்பு திருச்சியில் இன்னும் அடங்காத நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்மாடிப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சேர்ந்த ஜெபஸ்டின் மகன் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (வயது 41) என்ற பிரபல ரவுடியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவர் மீது தமிழக முழுவதும் கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அதில் பல வழக்குகள் முடிக்கப்பட்டு சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுரேஷ் ஐ.ஜே.கே கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சுதா பிரியா கிழக்குறிச்சி ஊராட்சியின் துணை தலைவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுரேஷ், வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த போலீசார் விசாரணைக்கு என பட்டறை சுரேஷை அழைத்துச் சென்றனர். அப்படி சுரேஷை அழைத்துச் சென்ற போலீசார் யார் எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்பது கூட தெரியாத நிலையில், திருச்சி ரவுடிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போலீசார் பட்டறைசுரேஷை என்கவுண்டர் செய்வதற்காக அழைத்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக திருவெறும்பூர் போலீசார் தான் அவரை அழைத்துச் சென்றார்கள் என்பது தெரிந்ததும் சற்று நிம்மதி அடைந்தாலும் உடனடியாக அவரது குடும்பத்தார் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது அங்கு பட்டறை சுரேஷ் இல்லை.

இந்த நிலையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து சுரேஷிடம் டி.எஸ்.பி (பொ) சீனிவாசன் தலைமையில் போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து நேற்று இரவு என்ன நடக்கப்போகிறது அடுத்து ஒரு என்கவுண்டரா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இப்பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது. அதாவது யார் அழைத்தது என வெளியில் தெரியாமலேயே விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பிரபல ரவுடி பட்டறை சுரேஷிடம் சட்ட விரோத செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாக போலீசார் தரப்பிலே கூறப்பட்டுள்ளது.

திருச்சியின் பிரபல ரவுடிகளில் ஒருவரான பட்டறை சுரேஷ் தற்போது ஒரு கட்சியில் பொறுப்பு வகித்து வரும் நிலையில், அவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்ற போலீசார் சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பியதாக வெளியிட்டு இருப்பது மாவட்டத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe