Skip to main content

மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி; திருச்சி போலீசார் அதிரடி

 

 trichy number one tollgate area ration rice incident 

 

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி திருச்சி சரக டிஎஸ்பி சுதர்சன் அறிவுறுத்தலின்படி கடுமையாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் குழுவுடன் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் குறிஞ்சி நகரில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் சந்தேகத்திற்கு இடமாக வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டு மில்லில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

 

விசாரணையில் மூட்டைகளில் இருந்தவை ரேஷன் அரிசி என்றும் அதனை குருணையாக அரைத்துள்ளதும் தெரியவந்தது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் அரிசியை சிறிது சிறிதாகச் சேகரித்து அதனை குருணையாக அரைத்து மாட்டு தீவனத்திற்கு கொடுத்து வந்தது தெரியவந்தது. எனவே அந்த மில்லின் உரிமையாளர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோவிலை சேர்ந்த பழனி (வயது 51), திருச்சி கீழ தேவதானம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 51), மண்ணச்சநல்லூர் திருப்பஞ்சலியை சேர்ந்த நம்பியப்பன்(வயது 39), திருச்சி காந்தி மார்க்கெட் உப்பிலியப்பன் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 23) ஆகியோரை கைது செய்து சம்பவ இடத்தில் இருந்த 100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும், 200 கிலோ ரேஷன் அரிசியை அரைத்த குருணையும் கைப்பற்றி இந்த தொழிலை செய்வதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மூன்றினையும் கைப்பற்றி நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !