
திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிந்துவந்தவர் சுபாஷினி (38). இவர், நேற்று முன்தினம் (25.07.2021) இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுபாஷினி உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு அவரது கிராமத்தில் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால்வண்ண நாதர் மேற்பார்வையில், முசிறி டி.எஸ்.பி. அருள்மணி, ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறையினர் ஏட்டு சுபாஷினி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கின்போது காவல்துறையினர் 3 முறை துப்பாக்கியால் சுட்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.