
திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர் ரஞ்சித் குமார் கல்லூரி வளாக விடுதியில் உள்ள தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று மாலை முதல் இரவு வரை ரஞ்சித் குமாரின் விடுதி அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் கோகுல், அறையின் பின் பக்க ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது ரஞ்சித்குமார், மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து ரஞ்சித்குமாரோடு பழகும் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கடந்த தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார். தன்னுடன் பயின்ற மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணிபுரியச் செல்ல உள்ள நிலையில், தான் மட்டும் தோல்வி அடைந்திருப்பது மன உளைச்சலாக இருப்பதாக சக நண்பர்களிடம் தெரிவித்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறை பல்வேறு கோணங்களில் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.