/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2863.jpg)
திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை மேயராக திவ்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்று 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் மொத்தமுள்ள 65 வார்டுகளில், 49 வார்டுகளில் திமுக, 5 வார்டுகளில் காங்கிரஸ், 3 வார்டுகளில் அதிமுக, மதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 இடங்களிலும், அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் 2ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதற்காக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட மன்றத்தில் காலை 9.30மணியளவில் திமுக வேட்பாளர் மு.அன்பழகன் மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமானிடம் தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் மேயர் வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வராததால் திமுக வேட்பாளர் அன்பழகன் திருச்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு மேயர் அன்பழகனை வாழ்த்தினார்கள். தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான், நகர பொருளாளர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. திமுக வேட்பாளர் திவ்யா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வராததால் துணை மேயரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மேயர் தேர்தலில் அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், 47வது வார்டு அமமுக மாமன்ற உறுப்பினர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)