திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலையில் தேசிய பறவை மயில்களின் சரணாலயம் உள்ளது. தேசிய பறவைகளின் சரணாலயத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், விராலிமலையில் இருந்த மயில்கள் இறைதேடியும், பாதுகாப்பு தேடியும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்கள் முழுவதும் சுற்றுகிறது. இதனால் மயில்களுக்கு ஆபத்தும் அதிகமாக உள்ளது.

Advertisment

இந்த பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வந்த தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை வறட்சி மற்றும் சமூக விரோத கும்பல் வேட்டையாடுவதால் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காட்டு பகுதியில் மயில்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தது. அவ்வப்போது சாலை ஓரங்களுக்கு வரும் மயில்கள் தோகை விரித்தாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதனை அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் நின்று ரசித்து செல்வார்கள்.

Advertisment

TRICHY - MADURAI STATE HIGHWAY PEACOCKS FOREST OFFICERS

காட்டு பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் மயில்கள் சர்வ சாதாரணமாக நடமாடியதாகவும், இவ்வாறு கிராமங்களில் சுற்றி திரியும் மயில்களுக்கு அரிசி, ராகி போன்றவற்றை பெண்கள் உணவாக கொடுத்து வந்ததாகவும், அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் விவசாய பயிர்களை மயில்கள் நாசம் செய்தாலும், மயில்கள் இறைவனின் அம்சமாக கருதப்படுவதால் விவசாயிகள் அவற்றை கொல்ல முற்படுவதில்லை.

மாறாக விவசாய நிலங்களில் பரண் அமைத்து அதன் மேல் இருந்து இசை எழுப்பி மயில்களை விரட்டி வந்தனர். இந்நிலையில் சில சமூக விரோத கும்பல் மயில்களை தோகைக்காகவும், அவற்றின் இறைச்சிக்காகவும் வேட்டையாட தொடங்கியதால் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே செவல்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் கடந்த 11ம் தேதி மணப்பாறை அருகேயுள்ள மரவனூர் இடையப்பட்டியை சேர்ந்த மூக்கன் மற்றும் கருப்பையா ஆகியோரது தோட்டத்தில் மயில்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனிடையே மயில் வேட்டையில் ஈடுபட்டவர்களை சரவணன் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த வனத்துறையினர் தோட்டத்து உரிமையாளர் கருப்பையா, மூக்கன் மகன் கோபாலகிருஷ்ணன், கோயில் பூசாரி மாரிமுத்து மனைவி அமுதா உள்பட 3 பேரை கடந்த 14ம் தேதி கைது செய்தனர்.

மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவான கோயில் பூசாரி மாரிமுத்து உள்பட 6 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான செவல்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி மாரிமுத்து (45), மரவனூர் இடையப்பட்டியை சேர்ந்த மூக்கன் (54) ஆகிய இருவரும் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார்.

இந்நிலையில், வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்யவும், எந்தெந்த பகுதிகளில் இதுவரை மயில்கள் வேட்டையாடப்பட்டுள்ளன என கண்டறியவும், சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து ஒரு நாள் மட்டும் இவர்களை வனத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனையடுத்து பூசாரி மாரிமுத்து மற்றும் மூக்கன் ஆகியோரை காவலில் எடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விங்கம்பட்டியை சேர்ந்த 4 பேருக்கு இந்த மயில் வேட்டையில் தொடர்பு இருப்பதும், மயில் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கிகள் அங்கு பதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து மாவட்ட வன அதிகாரி சுஜாதா உத்தரவின் பேரில் வனத்துறை தனிப்படையினர் துவரங்குறிச்சி அருகேயுள்ள விங்கம்பட்டிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த குமார் (21), நாகராஜன்(28), அழகன் (23), பொன்னுச்சாமி (35) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்கள் மயில் வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.