Skip to main content

புத்தூர் குழுமாயி குட்டிக்குடி திருவிழா... ஆட்டுக் கிடாக்களுடன் குவிந்த பக்தர்கள்..!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

trichy kulumai temple festival much devotees involved

 

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்தத் திருவிழாவிற்காக திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

 

ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன் தேரை, புத்தூர் அக்ரஹாரம், வடக்கு முத்துராஜா வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக் குடித்தல் இன்று நடைபெற்றது. இதற்காக புத்தூர் மந்தையில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக ஏராளமான ஆட்டுக் கிடா குட்டிகளைக் கொண்டு வந்து வரிசையில் காத்திருந்தனர்.  

 

trichy kulumai temple festival much devotees involved

 

இன்று (05.03.2021) காலை 10.30 மணிக்கு அம்மனின் அருள்பெற்ற மருளாளி சிவகுமார் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆட்டுக் கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். மேலும் வெள்ளிக் கிண்ணத்தில் கொடுக்கப்பட்ட ரத்தத்தையும் குடித்தார். இதில் ஆயிரக்கணக்கான ஆட்டுக் குட்டிகள் பலியிடப்பட்டன. முன்னதாக மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட குட்டி பலியிடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி புத்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்