/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CAR434.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தானந்தம் பிரிவு என்ற இடத்தில் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பை ஒட்டிய நிலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தனியார் தண்ணீர் வாகனம் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது ஓட்டுநர் சீட்டில் ஒருவர் அமர்ந்திருப்பதும் அவர் மீதும் தீப்பற்றி எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மணப்பாறை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அதற்குள் யாரும் அருகில் செல்ல முடியாத அளவில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. காரின் டயர்களும் பிடிக்க ஆரம்பித்ததால் மக்கள் காரின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி தீப்பற்றி எரிந்த காரால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதேபோல் காரில் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்திருந்தவர் தீயில் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை துணை சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஓடும் காரில் தீப்பிடித்து இருந்தால் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி இருக்கலாம். ஆனால் கார் சாலையில் மையப் பகுதியில் உள்ள தடுப்பை ஒட்டி காரின் கதவு திறக்க முடியாத அளவில் இருந்ததுடன், கார் எரிந்த இடத்திற்கு சற்று முன்னதாகவே கண்ணாடியும் உடைந்து கிடக்கிறது. மேலும் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கார் எரிந்ததால் தான் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்திருந்தவர் கருகிய நிலையில் அடையாளம் தெரியாத வகையில் மீட்கப்பட்டார். ஆகவே இது விபத்து தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயவியல் பரிசோதனை மேற்கொண்டனர்.
கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் காரணாமாக, திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)