Skip to main content

திருச்சி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

trichy government observation home inspected child rights commission member

 

திருச்சி காந்தி மார்க்கெட் முருகன் தியேட்டர் அருகில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

பின்னர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, "திருச்சியில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட நிர்வாகம் சரியாக பராமரித்து வருகிறார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கு இருக்கும் சிறுவர்களை நேரில் சந்தித்து விசாரித்தபோது எந்த குறைகளும் இல்லை எனத் தெரிவித்தனர். திருச்சியில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி நான்கு மாவட்டங்களில் உள்ள சிறுவர்கள்தான் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு இடம் பற்றாக்குறை இருப்பதால் அவற்றை விரிவு செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர்" கூறியுள்ளார்.

 

தொடர்ந்து பேசுகையில், "தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் வரும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் 21 கூர்நோக்கு இல்லங்களைத் தேர்வு செய்து அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மேலும் செயலி மூலமாக இந்தியா முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களைக் கண்காணித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம். இதனைத் தொடர்ந்து, நாளை நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம்.

 

குழந்தைகள் திருமணம் மற்றும் போக்சோ வழக்குகளைப் பற்றி அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம்தான் அதிக குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு செயலில் ஈடுபடும் அனைத்து துறைகளின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு அமைக்கப்படும்" எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் காந்தி மார்க்கெட் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசீலன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்