Trichy electricity board employee passes away

Advertisment

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த அடிப்படையிலான கேங்மேன்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தங்களுடைய பணி காலத்தில் மின்சார தாக்குதலுக்கு உட்பட்டு உயிரிழந்தால் தங்களுடைய குடும்பத்திற்கு எந்தவித அரசு உதவியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் போகும். எனவே அரசு தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இதுபோன்ற கேங்மேன்களுக்கு, அவர்கள் போடும் வாய்மொழி உத்தரவில் பணியாற்றிட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி தென்காசி மாவட்டம், ரெட்டியார்பட்டியிலிருந்து ஒப்பந்த பணியாளரான ராஜீவ்காந்தி என்ற கேங்மேன் திருச்சி மலைக்கோட்டையில் 110கேவி எஸ்.எஸ்.சி.ல். பணியாற்றிட உரிய அனுமதி கடிதம் பெற்றுவந்துள்ளார். அப்படி பணியாற்றவரும் கேங்மேன்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக பதிவேட்டில் கையெழுத்திட்டால் தான் சம்பளம் வழங்கப்படும். ஆனால் அவரை திருச்சி மின் பகிர்மான கழக டி.இ சண்முகசுந்தரம், மலைக்கோட்டையில் பணியாற்ற வந்தவரை திருச்சி மிளகுபாறை பகுதியில் 110கேவி எஸ்.எஸ்.சி.ல். பணியாற்றிட வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் மலைக்கோட்டை ஏ.இ சுப்புலட்சுமி மறுப்பு தெரிவிக்காமல் அவருடைய பகுதியில் பணியாற்ற வந்தவரை, இந்த பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் 12ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராஜீவ்காந்தி எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து 80 சதவீத காயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்த விபத்து நடந்தது தொடர்பாக அப்போது நம்மிடம் பேசிய எஸ்.இ. பிரகாஷ், “தவறு முழுவதும் சண்முகசுந்தரத்தின் மீது உள்ளது. சென்னை வரை தகவல் கொடுக்கப்பட்டு அவருக்கும், மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை மெமோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜீவ் காந்தி நேற்று (16ம் தேதி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்த டி.இ சண்முகசுந்தரம், ஏ.இ, ஏ.டி உள்ளிட்ட அனைவரும் நேற்று திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

இறந்துபோன ராஜீவ்காந்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் சொந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பதால், இப்பிரச்சனையை புதிய தமிழகமும் கையில் எடுத்துள்ளது.

Advertisment

இந்த பிரச்சனையில் மின்வாரியத்தில் உள்ள ஒரு ஏ.இ மட்டும் தற்காலிகமாக சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார். மற்ற எந்த அதிகாரியையும் பணியிடமாற்றமோ, சஸ்பெண்டோ செய்யாமல் இருப்பதால் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இது குறித்து தெரிவிக்கையில், எப்போதும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் டி.இ. மற்றும் ஏ.இ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் பெயரளவிற்கு ஒரு ஏ.இயை மட்டும் சஸ்பெண்ட் செய்வது எந்தவிதத்தில் நியாயம். புதிய போஸ்ட் கம்பங்கள் ஊன்றுவதற்கு என்று சம்மந்தபட்ட நபர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொள்ளும் அதிகாரி, மின்வாரியத்தில் இருந்து வழங்கப்படும் 14ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு, மின்கம்பம் ஊன்றும் கேங்மேன்களுக்கு ஒருவேளை உணவு கூட வாங்கி கொடுக்காத அதிகாரியை மின்வாரிய உயர் அதிகாரிகள் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

எனவே அதிகாரிகளின் அலட்சியத்தாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் உயிரிழந்த ராஜீவ்காந்தியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட்செய்ய வேண்டும். இல்லையென்றால் வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Trichy electricity board employee passes away

மேலும், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி குறித்து பதிவு செய்யப்படும் ஆவணத்தில் ராஜீவ் காந்தி பணி தொடர்பாக வைட்னர் வைத்து அழித்து மாற்றி எழுதியுள்ளதும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.