
மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பினை வாங்கிச் செல்லும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களிடம் உற்சாகம் அதிகரித்து வருகிறது.
அதேசமயம், சில இடங்களில் பொருட்கள் ஒன்றிரண்டு விடுபடுகிறது, பை தரப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு அனைத்து பொருட்களும் முறையாக சேர வேண்டும், பையும் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரும் சில இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு தரமாகவும் சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். இன்று அவர், பூலோகநாதர் கோவில் தெரு, சமஸ் பிரான் தெரு, கள்ளத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார்.