
திருச்சி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். இதில், மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கீழ்த் தளத்தில் அமர்ந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், நேரடியாக அவர்கள் அமர்ந்திருந்த கீழ்த் தளத்திலேயே மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார்.
அப்போது, திருச்சி ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன், தன்னுடைய வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கு சம்பந்தமான மனுவை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தார். அதேபோல் கோட்டையபட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வி என்பவர் நில மோசடி தொடர்பான மனுவை கண்காணிப்பாளரிடம் அளித்தார். அம்மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர், மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் திரும்பிச் செல்வதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள் எஸ்.பி.க்கு நன்றி தெரிவித்து விட்டுச் சென்றனர்.