Trichy District Police team arrested two

Advertisment

தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களைக் கட்டுபடுத்த தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சரித்திரப் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள், தேடப்படும் குற்றவாளிகள், ஜாமீனில் உள்ள குற்றவாளிகள் என அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தும், சிலரை எச்சரித்தும் அனுப்பிவைத்துவருகின்றனர். அதன்படி, தற்போதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்திலும், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் காவல்துறை எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல், மணல்மேடு என்ற இடத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றித் திரிவதாக தனிப்படை காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு ஆயுதங்களுடன் திரிந்தவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அந்த விசாரணையில், அவர்கள்மணல்மேடு வடக்கு பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்து. மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மணல்மேடு பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தில் திட்டம் தீட்டிக் கொலை செய்யும் எண்ணத்துடன் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.