Skip to main content

"வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" - திருச்சி மாவட்ட எஸ்.பி.

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

trichy district police superintendent talks about north indian workers incide

 

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த 32 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு இன்று வரை மொத்தம் 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்று நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

 

அதில் ராம்ஜி நகர் பகுதியில் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர்களை கண்டறிந்து கடந்த 2022 ஆம் ஆண்டு 9 பேரையும் இந்த ஆண்டு இரண்டு நபர்களையும் என மொத்தம் 11 பேர் குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டு மிக முக்கிய குற்றவாளிகளான மதன் மற்றும் கமல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் கஞ்சா விற்பனை தொடர்பான புகார்கள் இருந்தால் 9688442550, 9498181235 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தற்போது கஞ்சா விற்பனை வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அரசிடம் இருந்து உதவிகள் பெற்றுத் தரப்படும் எனவும் கூறினார்.

 

மேலும் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 தொழிலாளர்களும் 406 பெண்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சப்பூர் மற்றும் எஸ்ஆர்எம் பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரையும் நேரில் சென்று அவர்களோடு கலந்து பேசி அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

 

அவர்களுக்கு திருச்சியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள். மேலும் அதிகாரிகள் மூலம் அவர்கள் தங்கி இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட அளவில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு அந்த எண்ணிற்கு அழைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னுடைய செல்போன் எண்ணிற்கு மூன்று பேர் தொடர்பு கொண்டு சமீபத்தில் வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு அது உண்மை இல்லை என விளக்கம் அளித்திருக்கிறேன். எனவே இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்