
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் நான்காவது முறையாக ஊரடங்கு மே 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அடிப்படை கிராமத்து மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு கிடக்கிறது. அன்றாட பிழைப்பை நடத்துவதற்கே யாராவது உதவி செய்யமாட்டார்களா? என்று கையேந்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் அத்தனை வாழையும் நாசமானது இன்னும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.05.2020) மாலை முதல் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நாசமாகியுள்ளன. மேலும் பல இடங்களில் வாழைகள் ஒடிந்து சேதமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் அந்தநல்லூா், சோமரசம்பேட்டை, குமாரவயலூா், தடியாகுறிச்சி, ஜீயபுரம், முள்ளிக்கரும்பூா், திருச்செந்துறை, கொடியாலம், புலிவலம், அணலை, திருப்பராய்துறை, சிறுகமணி, பெருகமணி, பேட்டைவாய்த்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் ஒடிந்து விழுந்துள்ளன.

திருச்சி மாவட்ட எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூா், நச்சலூா், மருதூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதமடைந்து விவசாயிகளுக்குப் பெரிதும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சாந்தி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் ஸ்ரீதா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா, உதவி இயக்குநா் முருகன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலா்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சேதமதிப்பு விவரங்களை அந்தந்தப் பகுதியின் வருவாய் மற்றும் வேளாண் அலுவலா்கள் மூலம் கணக்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.