பாஜக திருச்சி மண்டலத் துணைத் தலைவராக உள்ள விஜயரகு என்பவரை பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த காந்திமார்கெட் பகுதியில் இன்று (27/01/2020) அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தசம்பவத்தால் திருச்சி மாநகரில் பாலக்கரை, சத்திரம், காந்திமார்கெட் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 500- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகர் முழுவதும் பதட்டமான காணப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ், திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொல்லப்பட்டது மதத்தின் அடிப்படையில் நடைபெற்றதாக தெரியவில்லை. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக விஜயரகு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கொலைக் குற்றவாளிகள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை, இரண்டுக்கும் மேற்பட்ட மதத்தினராக ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கொலை சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கூறினார்.