/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4391.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத்தண்டனையும் ரூ.13,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி தனபாபு மற்றும் மகன் சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரில் வசித்து வந்த தனபாபுவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது, தேர்தல் செலவுக்காக தனபாபு ஒரு லட்சம் பணம் வெளியில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இவர்களைக் கொலை செய்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்துவிட்டார்.
இதனால், தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ராமசாமி மகன் ராஜகோபால் என்பவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30மணிக்கு ராஜகோபால் என்பவர், சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று ஒரு கனமான ஆயுதத்தால், தூங்கிக் கொண்டிருந்த தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
பின்பு அவர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் உள்ள மண் ரோட்டில் போட்டுவிட்டு தனது டாக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததுபோல்செய்துவிட்டுத்தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம்குறித்து கல்லக்குடி போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செல்வ முத்துக்குமாரி தீர்ப்பளித்தார். அதில் தாய், மகன் என இரட்டைக் கொலை செய்த ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ. 13000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)